விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி பா.ஜ.க. சார்பில் மே 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்தப்படும் என இல.கணேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசியின் கடுமையான ஏற்றத்தால் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்தவே அவதிப்பட வேண்டியுள்ளது. எனவே விலைவாசி உயர்வு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்வானி தலைமையில் மனித சங்கிலி நடத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள். டெல்லியில் வெங்காயம் விலை ஏற்றம் மற்றும் பற்றாக்குறையை மட்டுமே காரணம் காட்டி பா.ஜ.க. அரசை காங்கிரஸ் வீழ்த்தியது நினைவிருக்கும். இன்று எல்லா பொருட்களும் விலை ஏறியுள்ள நிலையில் இந்த அரசை மாற்றியே ஆக வேண்டும்.
'விலைவாசியை குறைத்துக் காட்டு இல்லையேல், ஆட்சியில் இருந்து நடையை கட்டு' என்ற கோஷத்துடன் மே 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம், கடையடைப்பு ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திட பா.ஜ.க. அறைகூவல் விடுக்கிறது.
இதற்கு பொதுமக்களும் வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். அன்றைய தினம் மாலை முக்கிய நகரங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.