உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள மகளிர் கிறித்தவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிதம்பரம், “வேகமாக உயர்ந்துவரும் அத்யாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பாஸ்மதி அல்லாத மற்ற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்தது, இறக்குமதி செய்யப்படும் உணவு எண்ணெய்களின் விலைகளை குறைத்தது ஆகியன விலை குறைப்பு நடவடிக்கைகள்தான்” என்று கூறினார்.
கல்வி அமைப்பை ஜனநாயகமாக்கும் நடவடிக்கையே தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் அளிக்கப்படும் இட ஒதுக்கீடு என்று கூறிய அமைச்சர் சிதம்பரம், இந்தியாவின் கல்வி அமைப்பு எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லையென்றும், ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் படிக்க வேண்டிய 76 லட்சம் சிறுவர்கள் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று கூறினார்.
எனவேதான் நமது நாட்டின் கல்வி அமைப்பை பலப்படுத்த சர்வ சிக்சா அபியான் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி இந்த ஆண்டிற்கு ரூ.13,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறிய சிதம்பரம், இந்த ஆண்டில் மட்டும் 2 லட்சம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், 2 லட்சம் பள்ளிக்கூட அறைகள் கட்டப்படும் என்றும் கூறினார்.