அரவாணிகள் படிக்க பாதுகாப்பான கல்வி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட அரவாணி மந்தரா கூறினார்.
விழுப்புரத்தில் நடந்த கூவாகம் விழாவில் "மிஸ் கூவாகம்' போட்டியில் சேலத்தை சேர்ந்த மந்தரா தேர்வு செய்யப்பட்டார். இவர் தனது சொந்த ஊரான சேலம் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மந்தரா கூறியது:
மிஸ் கூவாகம் போட்டியில் நான் தேர்வு செய்யப்பட்டதற்கு முழு காரணம் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்து பொது அறிவு வினாவிற்கு நான் அளித்த பதிலே ஆகும். நான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன் . அதன்பின் வகுப்பில் என்னை அனைவரும் கிண்டல் கேளி செய்ததால் படிப்பை தொடரமுடியவில்லை.
அரவாணிகளுக்கு படிப்பு விஷயத்தில் தமிழக அரசு போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும். அதுமட்டுமின்றி எங்களுக்கு அரசு வேலையும் கொடுக்க அரசு முன்வரவேண்டும். வயது முதிர்ந்த அரவாணிகளுக்கு அரசு உதவி தொகை வழங்கவேண்டும். நாங்களும் மனித உணர்வுகளுக்கு உட்பட்டவர்கள் என பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு மந்தரா கூறினார்.