விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் பழனிசாமி கூறினார்.
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் விலைவாசி உயர்வு குறித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாநில கட்டுப்பாட்டு குழுத்தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்துப் பேசினார். அப்போது அவர் கூறியது:
இந்தியாவில் தற்போது விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது. இதனால் ஒன்றை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெட்கமின்றி கூறுவது வேடிக்கையாக உள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.
மத்திய ஜவுளி துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு எந்த விதத்திலும் நாட்டின் நிலமையை தீர்மானிப்பதில்லை என கூறியுள்ளார்.கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் விலைவாசி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமர் மன்மோகன்சிங்கே ஏற்றுக்கொண்டு அத செயல்படுத்த முயற்சி செய்து வருகிறார்.
ஆனால் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிறுபிள்ளைதனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.முதல்வரோ மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரித்துள்ளதால் விலைவாசி உயர்ந்துள்ளது என கூறியுள்ளார். இந்த பேச்சு வேதனையளிக்கிறது. விலைவாசி உயர்வை கண்டித்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து போராடும் என்றார்.