அமைச்சர் பதவியை சொந்த குடும்ப நலனுக்காக பயன்படுத்தி முறைகேடு செய்துள்ள டி.ஆர்.பாலுவை பதவியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தமது பதவியைப் பயன்படுத்தி அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து தமது மகன்களால் நிர்வகிக்கப்படும் கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன், கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு இந்தியன் ஆயில், இயற்கை எரிவாயுக் கழகத்தின் மூலம் எரிவாயு கிடைத்திடச் செய்துள்ளார்.
2007 மார்ச் முதல் நாள் அன்று இந்திய எரிவாயு ஆணையத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான யு.டி.சவுபேயை நேரில் அழைத்து, தமது நிறுவனங்களுக்கு எரிவாயு சப்ளை செய்ய இந்தியன் ஆயில், இயற்கை எரிவாயு சப்ளை கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஆர்.எஸ்.சர்மாவுக்கு கடிதம் எழுதுமாறு நிர்ப்பந்தப்படுத்தி உள்ளார்.
அதைத் தொடர்ந்து 2007 மார்ச் 2-ல் எரிவாயு ஆணையத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் இந்தியன் ஆயில் மற்றும் எரிவாயு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில் 2006 ஜூன் 28-ல் பெட்ரோலியத் துறை அமைச்சர் முன்னிலையில் டி.ஆர். பாலு தமது குடும்ப நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்க கோரியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் தமது அமைச்சர் பதவியை சொந்த குடும்ப நலனுக்காகப் பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளார்.
இதன் மூலம் மத்திய அமைச்சராக நீடிக்கும் தகுதியையும், தார்மீக உரிமையையும் டி.ஆர்.பாலு இழந்து விட்டார். மத்திய அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. எனவே டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் டி.ஆர்.பாலு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.