மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் நடவடிக்கை பார்க்கும் போது, பிரதமரால் தன்னை எதுவும் செய்ய இயலாது என்று அச்சுறுத்தும் போக்கு இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களது நியாயமான கோரிக்கைகளுக்காக தனது அதிகாரத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது.
ஆனால் தனது சொந்த நிறுவனம் தனது குடும்பத்தினரது நிறுவனம் லாபம் பெற வேண்டி அரசை வற்புறுத்தி முறைகேடாக மத்திய பெட்ரோலியத் துறையிடமிருந்து சலுகை பெற்றார் டி.ஆர்.பாலு என ஊடகங்கள் பகிரங்கமாக குற்றம்சாற்றின. இதை மாநிலங்கள் அவையில் அ.இ.அ.தி.மு.க உறுப்பினரும் எழுப்பி எதிர்கட்சிகளும் ஆதரித்துள்ளன.
இதுபோன்ற குற்றசாட்டுகளுக்கு உள்ளான ஒருவர் தம்மீது இதுபோல ஒரு குற்றச்சாட்டு வந்துவிட்டதே என வேதனைப்படவேண்டும். மாறாக நெஞ்சு நிமிர்ந்து ''ஆமாம், நான் செய்தது உண்மை. அதனால் தவறென்ன?'' என மத்திய அமைச்சர் சவால்விட்டு கேட்பது ஆணவப் போக்கின் வெளிப்பாடு. இவரது இந்த முயற்சிக்கு பிரதமர் அலுவலகம் எட்டுமுறை நினைவூட்டு அனுப்பி பெட்ரோலியத் துறையை வற்புறுத்தி உள்ளது.
தவறு செய்த பிறகு அமைச்சர், அது குறித்து எந்தவித பாதிப்பும் அடையாமல் நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் உங்களால் என்னை என்ன செய்து விட முடியும் என்கின்ற நினைப்பு. ஏன் பிரதமராலேயே தன்னை எதுவும் செய்ய இயலாது என்கின்ற அச்சுறுத்தும் போக்கு இது.
கேள்வி கேட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெளியே அனுப்பியிருக்கலாம். தன்னை கேள்வி கேட்க எவரும் இல்லை என டி.ஆர்.பாலுவும் மனப்பால் குடிக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே அவரை அனுப்பாமல் தடுக்கின்ற சக்தி மக்களுக்கு உண்டு என்பதை தேர்தல் நேரத்தில் நிரூபிப்பார்கள் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.