''10ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் தீயில் எரிந்ததால் பாதிக்கப்பட்ட விடைத்தாள்களுக்கு உரிய மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், வேலூர் ஊரீஸ் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எரிந்தது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் மாநிலம் முழுவதும் 74 மையங்களில் திருத்தப்பட்டு வருகின்றன. இதில் வேலூர் ஊரீஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இரண்டாம் தாள் 22,307 விடைத்தாள்கள், ஆங்கிலம் இரண்டாம் தாள் 12,888 விடைத்தாள்கள், கணிதம் 3,825 விடைத்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 52,020 விடைத்தாள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு 7 மணியளவில் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து அவைகள் அந்தப் பள்ளியின் ஒரு அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீல் வைத்து காவல்துறையினர் பாதுகாப்பாக காவல் காத்து வந்தனர். இரவு 9.30 மணியளவில் விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து புகை வந்ததையடுத்து காவல்துறையினர் உடனடியாக அந்த அறையின் கதவை உடைத்து பார்த்ததில், அங்கு தீப்பற்றி எரிந்ததை கண்டனர்.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களும் சிறிது நேரத்திலேயே வந்து தண்ணீரால் தீயை அணைத்தனர். நல்லவேளையாக அங்கு வைக்கப்பட்டிருந்த பல பிரிவு விடைத்தாள்களும் எரிந்து போகாமல் பாதுகாக்கப்பட்டு விட்டன.
ஆங்கிலம் இரண்டாம் விடைத்தாள்கள் இருந்த பகுதி மட்டும் தீயினால் பாதிப்பு ஏற்பட்டது. பிற விடைத்தாள்கள் பாதிக்கப்படவில்லை. சேதமடைந்த விடைத்தாள்கள் விழுப்புரம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும். இந்த தீ விபத்து குறித்து காவல்துறை மற்றும் வல்லுனர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதால் சேதமடைந்த விடைத்தாள்களின் விவரம் விசாரணைக்கு பின்னர் தெரியவரும்.
இதுபோன்று எதிர்பாராத நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடைபெற்ற போது அரசு தேர்வுத்துறை வழக்கமாக கடைப்பிடித்து வரும் நடைமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பரிகாரம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட விடைத்தாள்களுக்கு உரிய மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.