''ஆசிரியர் பணியை கடமையாக நினைக்காமல் பெரும் பாக்கியமாக கருத வேண்டும்'' என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சுற்றுச்சூழல் பற்றிய தமிழ் அகராதி, எதிர்கால கல்வித்திட்டம் தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் அப்துல் கலாம் கலந்து கொண்டு பேசுகையில், எனது ஆசிரியர் சிவசுப்பிரமணி அய்யர் ஒரு ஈடுபாட்டுடன் மனப்பூர்வமாக பாடம் நடத்துவார். அவர் பாடம் சொல்லிக்கொடுப்பதை ஒரு கடுமையாக கருதாமல் அதை ஒரு லட்சியமாகவே நினைத்து பாடம் நடத்துவார்.
அந்த ஆசிரியரின் பழக்கவழக்கங்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எங்களுக்கு ஒரு ஆசிரியராக மட்டுமல்ல ஒரு வாழ்க்கை வழிகாட்டியாகவே வாழ்ந்து காட்டினார். மாணவர்களுக்கு பாடம் புரியவில்லை என்று சொன்னால் ஒருபோதும் கோபப்பட மாட்டார்.
ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் வாழ்க்கையையும் செம்மைப்படுத்த வேண்டும். லட்சியம் உருவாக அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மாணவர்களுக்கு புரியும் வரை பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணியை கடமையாக கருதாமல் பாக்கியமாக கருத வேண்டும் என்று அப்துல் கலாம் கூறினார்.