''பெரும்பான்மை மக்களுக்கு இந்த நாட்டின் தேசம், பண்பாடு, பாரம்பரியம் போன்ற உயர்ந்த வார்த்தைகளின் சரியான பொருள் தெரியவில்லை. தேசம் குறித்து பேசினால் அதை மதவாதம் என்று பிரித்து பேசுகிறார்கள்'' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு என்பது நடந்ததை நடந்தபடி சொல்வது என்பது பொருள். ஆனால் ஒளரங்கசீப் வரலாற்றை கண்காட்சியாக வைத்தால் தன்னை ஒரு மதச்சார்பற்றவாதியாக தானே அறிவித்துக் கொண்ட ஆற்காடு இளவரசர் ஒளரங்கசீப்புக்கு ஆதரவாக குரல் எழுப்புகிறார்.
காவல்துறை அதிகாரிகள் வன்முறையினர்கள் போல் செயல்படுகிறார்கள். படங்களைப் போட்டு உடைக்கிறார்கள். சமீபத்திய செய்தி வேதனையான ஒன்று. குறும்படங்களுக்காக நான்கு தேசிய விருதுகள் பெற்றவரும் உலக அளவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி மிக சிறந்த ஆவண படம் ஒன்றை தயாரித்துள்ளார்.
இந்த தேசத்தின் 10 பாரம்பரியம் பெற்றுள்ளன என போற்றப்படுகின்ற 1000 ஆண்டு காலமாக தொடர்ந்து வழிபட்டு வருகின்ற அரிய கலை சிற்பங்களைக் கொண்ட இடங்களை குறித்து அவர்கள் தயாரித்துள்ள நுண்படம் இந்த தேசத்தின் பாரம்பரியம், பண்பாட்டை பற்றியும் பறைசாற்றுகின்றது.
ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதம் கொள்ள வைக்கும் இந்த படத்தினை தேசிய அலைவரிசையில் ஒளிபரப்புவதாக தூர்தர்ஷன் ஏற்றுக் கொண்டது. ஆனால் படம் தயாரித்து முடித்த பிறகு ஒளிபரப்ப தயக்கம் காட்டுகிறார்கள்.
இது தேர்தல் ஆண்டு. நீங்கள் போற்றும் இடங்கள் பெரும்பான்மையானவை இந்து கோவில்கள் என காரணம் காட்டுகிறார்கள். தேசம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றினை ஒரு மதத்தின் வெளிப்பாடு என முத்திரை குத்தி ஒதுக்கும் இந்த அறியாமையை வன்மையாக கண்டிக்கிறேன் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.