திருவள்ளூர் அருகே அங்கன்வாடி மையத்தில் தட்டம்மை தடுப்பூசி போட்ட 4 குழந்தைகள் திடீரென இறந்தன.
திருவள்ளூரை அடுத்த பென்னலூர்பேட்டை அங்கன்வாடி மையத்தில், கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக நேற்று குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. ஏராளமான பெண்கள் 10 மாதம் முதல் ஒரு வயது வரையிலான தங்களது கைக்குழந்தைகளை தடுப்பூசி போட தூக்கிக் கொண்டு வந்து இருந்தனர்.
பென்னலூர்பேட்டையில் முதலில் அல்லிமுத்து என்பவரின் பெண் குழந்தை பூஜா, ஏழுமலையின் குழந்தை நந்தினி, மோகன் என்பவரின் குழந்தை மோகனப்பிரியா ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. சில வினாடிகளிலேயே குழந்தைகள் வாயிலும், மூக்கிலும் நுரை தள்ளி, மயங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தைகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மயக்கம் அடைந்த 3 குழந்தைகளையும் கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அவசர ஊர்திக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவசர ஊர்தி வர தாமதனம் ஏற்படும் என்று கதறிய பெற்றோர்கள் அந்த வழியாக வந்த ஒரு காரைப் பிடித்து தங்கள் குழந்தைகளுடன் திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பூஜா, நந்தினி, மோகனப்பிரியா ஆகிய குழந்தைகள் பரிதாபமாக உயிர் இழந்தன.
இதே போல வெங்கடாபுரத்தில் தடுப்பூசி போடப்பட்ட குப்பையா என்பவரின் 11 மாத குழந்தை லோகேந்திரன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு அந்த குழந்தை கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் பலனின்றி அங்கு அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
பிளேஸ்பாளையத்தில் தடுப்பூசி போடப்பட்ட ரவி என்பவரின் ஒரு வயது மகன் விக்னேஷ், சிறுவானூர் கண்டிகை கிராமத்தில் தடுப்பூசி போடப்பட்ட ஆனந்தபாபு என்பவரின் 11 மாத குழந்தை ரஞ்சிதா ஆகிய குழந்தைகள் இதே போல ஆபத்தான நிலையில் திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதே போல தடுப்பூசி போட்டு மயங்கி விழுந்த ரோஷ்மா, கலையரசி உள்பட 3 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனடியாக திருவள்ளூருக்கு விரைந்தார். அங்கு குழந்தைகளை பறிகொடுத்து, கண்ணீரும், கம்பலையுமாக கதறித்துடித்துக் கொண்டு இருந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். குழந்தைகள் சாவுக்கு என்ன காரணம் என்று கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திருவள்ளூர், கச்சூர் ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளை பறிகொடுத்த மற்றும் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அங்கு சோகமயமாக காணப்படுகிறது.
4 பேர் தற்காலிக பணி நீக்கம்!
இந்த நிகழ்வு தொடர்பாக கச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஜெயலலிதா (45), மருந்தாளுனர் பி.ஹேமாதிரி (32), பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பார்வதி (44), மருந்தாளுனர் மணி (37) ஆகியோர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.