சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்களை பதிவு செய்ய மின்னணு முறை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறினார்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பீட்டர் அல்போன்ஸ் (காங்.), செங்கோட்டையன் (அ.இ.அ.தி.மு.க.), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்) ஆகிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பத்திரப்பதிவு துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் பதில் அளிக்கையில், தமிழகத்தில் மொத்தம் 568 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றில் பல அலுவலகங்கள் சொந்த கட்டடங்களில் இயங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றுக்கான கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. படிப்படியாக கட்டடங்கள் கட்டப்பட்டு அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் சொந்த கட்டடங்களில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பத்திரப்பதிவில் மின்னணு முறையை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கு அதிகாரிகளை அனுப்பி, அதன் சாதக பாதகங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பத்திரங்களை பதிவு செய்த பின்னர் குறைந்த காலத்தில் அவை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் 80 விழுக்காடு அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறினார்.