தீவிரவாதத்தின் ஆணிவேரை கண்டறிந்து அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கொடைக்கானலில் நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி அனைத்து கட்சிகளும் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
அப்போது எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (அ.இ.அ.தி.மு.க) பேசுகையில், கடந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்ற தீவிரவாத இயக்கங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. ஆனால் இன்று கடந்த இரண்டாண்டு காலத்தில் தீவிரவாதம் பரந்து விரிந்து சட்டம், ஒழுங்கு கேள்வியாகி இருக்கிறது.
கடந்த 12ஆம் தேதி தீவிரவாதிகளை பிடித்து காவல்துறையில் வைத்திருந்ததாகவும், அவர்கள் காவலில் இருந்த போது 19ஆம் தேதி தப்பியோடியதாகவும், அப்போது ஒரு தீவிரவாதி மட்டும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் உண்மை நிலை என்ன? தீவிரவாதிகளை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களின் நிம்மதிக்கு என்ன உத்தரவாதம் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், இதனை வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்கக் கூடாது. இதனை ஜனநாயக முறையில் அணுக வேண்டும். இளைஞர்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் அநீதி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை காரணமாக ஆயுதம் தாங்கி தீர்வு காணலாம் என்று இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து விடுகின்றனர். இதன் ஆணிவேரை கண்டறிந்து தீவிரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயுதம் தாங்கி போராடியவர்கள் ஜனநாயக பாதைக்கு திரும்பி இருப்பதற்கு நமது அண்டை நாடான நேபாளமே நல்ல உதாரணமாகும். எனவே, இந்த விஷயத்தில் காரணங்களை ஆராய்ந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதேபோல் பா.ம.க உறுப்பினர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் ஆகியோர் பேசுகையில், தீவிரவாதத்தை ஒடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம் என்றனர்.