தீவிரவாதத்தின் ஆணிவேரை கண்டறிந்து அதனை அகற்றுவதற்கு அரசுடன் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி அனைத்து கட்சிகளும் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், எந்த ஆட்சி நடந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கைதான். அரசு, எதிர்க்கட்சிகள், மக்கள் அனைவரும் சேர்ந்து தான் தீவிரவாதத்தின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. பெருமழை, வெள்ளம், பூகம்பம் ஏற்படும் காலங்களில் எல்லோரும் இணைந்து எப்படி பாதிப்புகளுக்கு பரிகாரம் தேடுகிறோமோ, அதுபோலத்தான் தீவிரவாதத்தை தடுப்பதிலும் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட முன்வர வேண்டும்.
அண்டை மாநிலங்களில் நிகழும் தீவிரவாத செயல்களை கருத்தில் கொண்டு அவை இங்கு பரவாமல் தடுப்பதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள், மாநிலம் முழுவதும் எல்லைகளை பலப்படுத்துதல், சோதனைச் சாவடிகளை அமைத்து ஊடுருவலை தடுத்தல், கடற்கரை, காட்டுப்பகுதியில் தீவிரவாதத்தை வளர விடாமல் பார்த்துக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் மேற்கொண்டு வருகின்றன.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து காவல் படையும், சிறப்பு அதிரடிப்படையும் கடந்த 19ஆம் தேதி அந்த இடத்திற்கு சென்ற போது, தீவிரவாதிகள் காவல்துறை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், காவல்துறை தற்காப்புக்காகவும், அவர்களை பிடிப்பதற்காகவும் திருப்பி துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அப்போது அவர்கள் தப்பியோடிவிட்டார்கள்.
அந்த இடத்தை சென்று பார்த்த போது நவீன் பிரசாத் குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காட்டுப்பகுதியில் தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த நவீன் பிரசாத் மூன்று கொலை, கொலை முயற்சி, ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை தொடர்பான குற்றச் செயல்களில் 2000 ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்துள்ளார்.
காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை காரணமாக சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு, ஜாதிப் பூசல்கள் இன்றி அமைதி காக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் இதுவரை 24 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் ஆயுதம் தாங்குகின்ற நிலை ஏன் ஏற்படுகின்றது என்பதற்கான ஆணிவேரை கண்டறிந்து அதனை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டால் தான் மக்கள் அமைதியாக வாழ வழிபிறக்கும். அதற்கு அனைவரும் ஒன்றுபட்டு கடமையாற்ற முன்வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.