உண்மையான ம.தி.மு.க. எது? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டது. வைகோ எதிர் அணியினர் தங்களது மனுவை திருப்ப பெற்றுக் கொண்டனர்.
2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அ.இ.அ.தி.மு.க.வுடன் வைகோ கூட்டணி வைத்ததாக கூறி எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். பின்னர் இருவரும் தி.மு.க.வுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள்.
அப்போது தங்கள் தலைமையிலான ம.தி.மு.க.தான் உண்மையான ம.தி.மு.க. என்று அவர்கள் அறிவித்தனர். தங்களது அணியையே உண்மையான ம.தி.மு.க. என்று அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அவர்கள் மத்திய தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கு பதில் அளித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி, தனது தலைமையிலான ம.தி.மு.க.வே உண்மையானது என்றும், அதற்கு ஆதாரமாக கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார். அத்துடன் வீடியோ ஆதாரங்களையும் அவர் தாக்கல் செய்தார்.
கடந்த ஓராண்டு காலமாக இது பற்றி விசாரித்து வந்த தலைமை தேர்தல் ஆணையம் இந்த பிரச்சினை குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வுக்கும், செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோருக்கும் தாக்கீது அனுப்பியது.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை வைகோ தனது கட்சியைச் சேர்ந்த 2 நாடாளுமன்ற, 6 சட்டமன்ற உறுப்பினர்கள், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோருடன் தேர்தல் ஆணையர்கள் முன்னிலையில் ஆஜரானார். அப்போது, செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டனர்.இதைத் தொடர்ந்து விசாரணையை நேற்று செவ்வாய்க்கிழமைக்கு தேர்தல் ஆணையாளர்கள் தள்ளி வைத்தனர்.
அதன்படி நேற்று மீண்டும் விசாரணை நடந்த போது வைகோ உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், வழக்கறிஞர் கிருஷ்ணமணி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆஜராயினர்.
ஆனால் செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனஞ்செயன், போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் ம.தி.மு.க.வுக்கு உரிமை கோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இது குறித்து வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், போலி கையெழுத்திட்டு தயாரிக்கப்பட்ட ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் செஞ்சி ராமச்சந்திரனும், எல்.கணேசனும் சமர்ப்பித்து மோசடி செய்துள்ளனர்.
தங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை என்பதை உணர்ந்து, மனுவை அவர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனர். அவர்களின் இந்த நடவடிக்கை மூலம் எங்களது தலைமையிலான ம.தி.மு.க.வே உண்மையானது என்று நிரூபணமாகியுள்ளது. எங்கள் தலைமைக்கே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்து உள்ளது என்று வைகோ கூறினார்.