கொடைக்கானல் மலைப் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலின்போது தப்பியோடிய மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகளின் முக்கியத் தலைவர்களான பாலன், ரவீந்திரன், சிவா என்கிற பார்த்திபன் உள்படப் பலர் இதுவரை காவல்துறையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
தர்மபுரி ராமியன அள்ளியைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி, அவனது காதலி சந்திரா, தர்மபுரி மூக்கனேரியைச் சேர்ந்த நவீன் என்கிற பிரசாத், காளிதாஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் குற்றவாளிகள் தலைமறைவாக இருந்து வந்தனர்.
அண்மையில் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுந்தர மூர்த்தி திருப்பூரில் கைது செய்யப்பட்டான். கொடைக்கானல் வனப்பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் நவீன் பிரசாத் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்தச் சம்பவத்தில் சிலர் தப்பிவிட்டனர். அவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்குத் தப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில், கொல்லப்பட்ட நவீன் பிரசாத்தின் உடல் இன்று தர்மபுரிக்குக் கொண்டுவரப்படுகிறது. அவனது இறுதிச் சடங்கில் தேடப்படும் நக்சலைட்டுகள் கலந்து கொள்வார்கள் என்று கருதப்படுகிறது.
இதையொட்டி கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தர்மபுரி காவல்துறை கண்காணிப்பாளர் நஜ்மல் கோடா, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணன், விஜயராகவன், மோகன் உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் தேடுதல் வேட்டை நடக்கிறது.