மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 16 ஆம் தேதி துவங்கியது. வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக கண்டாங்கிப்பட்டு உடுத்தி கையில் நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் அழகர் கோயில் சுந்தரராஜ் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டார் அழகர்.
மூன்று சாவடிக்கு நேற்று காலை 6 மணிக்கு வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து சேவித்து நகருக்குள் அழைத்து வந்தனர். இரவு 11 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு விடிய விடிய எதிர்சேவை நடந்தது.
இதையடுத்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசாமி சன்னதி முன்பு உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் காலை சரியாக 7.05 மணிக்கு பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்றபடி கள்ளழகரை தரிசித்தனர்.
இதையடுத்து ஆற்றில் பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு செல்லும் கள்ளழகர், இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்குச் செல்கிறார்.