மயக்க பிஸ்கட் கொள்ளையர்கள் உள்ளிட்ட சமூக விரோதிகளிடம் இருந்து ரயில் பயணிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக சிறப்புக் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது.
ரயில்வே டி.ஐ.ஜி. சிவனாண்டி மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கமாண்டோ படை ரயில் கொள்ளை, சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்யும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் கமாண்டோ படையின் செயல்பாட்டை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சி.சாரங்கன் துவங்கி வைத்தார்.
இந்தக் கமாண்டோ படையில் ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஏ.கே.47 துப்பாக்கி, இருளில் உதவும் விளக்கு, வாக்கி டாக்கி, செல்பேசி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் படையில் உள்ள காவலர்கள் கொள்ளையர்களைத் திருப்பித் தாக்குவதிலும், விரட்டிப் பிடிப்பதிலும் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சி.சாரங்கன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 14 அதிவிரைவு ரயில்கள், எழும்பூரில் இருந்து புறப்படும் 11 ரயில்கள், திருச்சியில் இருந்து புறப்படும் 8 ரயில்கள், மதுரையில் இருந்து புறப்படும் 8 ரயில்கள் ஆகியவற்றிலும் கோடைகாலச் சிறப்பு ரயில்களிலும் கமாண்டோ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்" என்றார்.
சென்னை புறநகர், ஜோலார்பேட்டை, காட்பாடி மார்க்கத்தில் பாதுகாப்புப் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற அவர், கமாண்டோ படையினர் செல்லும் இடம் ரகசியமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.