Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ச‌ட்ட‌ப்படி 27 ‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீடு வழ‌ங்க வே‌ண்டு‌ம்: கருணா‌நி‌தி!

ச‌ட்ட‌ப்படி 27 ‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீடு வழ‌ங்க வே‌ண்டு‌ம்: கருணா‌நி‌தி!
, சனி, 19 ஏப்ரல் 2008 (15:48 IST)
"நாங்கள் சமூக நீதிக் கொள்கை சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டுமென்று கருதுகிறவர்கள். சட்டப்படி இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமே தவிர சலுகைப்படி அல்ல" எ‌ன்று த‌மிழக முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கேள்வி-பதில் அ‌றி‌க்கை வருமாறு:

கேள்வி: 27 சதவீத இட ஒதுக்கீட்டில் கி‌ரீமி லேயரைச் சேர்க்க சட்டரீதியாக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று; தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக; நாளேடு ஒன்றில் பெருந்தலைப்புச் செய்தி வெளியாகியுள்ளதே?

பதில்: "கி‌ரீமி லேயர்'' என்ற சொல் எல்லோரையும் இப்படித்தான் குழப்பிக் கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் மகிழ்ச்சியுற்றிருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு; "கி‌ரீமி லேயர்'' என்பது வேண்டாத ஒன்றுதான் - அது நீக்கப்பட வேண்டும் என்பதுதான் தி.மு.க. உயர்மட்டக் குழுவின் தீர்மானமே தவிர; அதைச் சேர்க்க வேண்டுமென்று தி.மு.க. சொல்லவில்லை - இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும்.

கேள்வி: உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்து - அதேநேரத்தில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. மத்திய அரசின் கல்வி நிலையங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலே உள்ளவர்களுக்கு மட்டும் செய்யும்போது, எஞ்சிய இடங்கள் இருக்குமானால் அப்போது பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையிலே உள்ளவர்களுக்கு அந்த இடங்கள் அளிக்கப்படலாம் என்கிறார்களே?

பதில்: அதனால்தான் நாங்கள் நேற்றைய தினம் நிறைவேற்றிய தீர்மானத்தில் 27 சதவீத இட ஒதுக்கீட்டினை முழுமையாகவும் உடனடியாகவும் வரும் கல்வி ஆண்டு முதலே நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம். அதுமாத்திரமல்ல, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலேயே 27 சதவீத இடஒதுக்கீட்டினை முழுமையாக நிரப்பிடும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவுக்கு மாணவர்கள் கிடைத்திடத் தக்கவகையில், `கிரீமி லேயருக்கான' அளவுகோல்களை ஓரளவுக்கு அரசு தளர்த்திக் கொள்ளலாம். இந்த நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஒட்டி - சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்டோரை முறையாகத் தீர்மானித்திட - மத்திய அரசும், மாநில அரசுகளும் - `கிரீமி லேயரை' அடையாளப்படுத்துவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவதைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம்.

அதற்குப் பிறகும் தேவையான அளவுக்கு மாணவர்கள் கிடைக்கவில்லை என்றால், இடஒதுக்கீட்டினை - அதன் நோக்கம் நிறைவேறும் வகையில் - செயல்படுத்திடத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளதால்; கேள்வியில் கேட்டவாறு, பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்குப் போக எஞ்சியுள்ள இடங்களை பொருளாதாரத்தில் முன்னேறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே உள்ளோர் பெற்றிடத்தக்க வகையில் கி‌ரீமி லேயருக்கான அளவுகோள்களைத் திருத்திக் கொள்ள தீர்ப்பிலேயே இடம் உள்ளது. ஆனாலும் இது; எங்கள் வேர்க்கொள்கையான உரிமையின் அடிப்படையில் கிடைப்பதல்ல - வேறு வழியின்றி தரப்படும் சலுகையே ஆகும். நாங்கள் சமூகநீதிக் கொள்கை சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டுமென்று கருதுகிறவர்கள். சட்டப்படி இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமே தவிர சலுகைப்படி அல்ல.

கேள்வி: முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலே இருந்தால் - அவர்களையும் கைதூக்கிவிட வேண்டுமென்பதற்காக தி.மு.கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலே கூறியிருக்கிறீர்கள். மத்திய அரசிலே கூட அது போன்றதொரு முடிவு எடுக்கப்பட ஏற்கனவே முயற்சி மேற்கொள்ளப்பட்டதா?

பதில்: பி.வி.நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக இருந்தபோது "முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்களுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு வழங்கலாமா?'' என்று மத்திய அரசின் சார்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்ட போது, உச்ச நீதிமன்றம் மிகத்தெளிவாக, "இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையை அளவு கோலாகக் கொள்வதற்கு இடமே இல்லை'' என்று தெளிவுபடுத்தியது. ஆனால் தி.மு.கழக ஆட்சியில் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், பின்தங்கியவர்கள் என்றெல்லாம் சொல்லாமல், ஒரு குடும்பத்திலே அதுவரை யாருமே பட்டதாரியாக வராமல் இருந்து, முதன்முதலாக பட்டதாரியாக ஒருவர் வருகிறார் என்றால், அந்தக் குடும்பம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதாவது முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவோ, பிற்படுத்தப்பட்டவர்களாகவோ, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவோ, தாழ்த்தப்பட்டவர்களாகவோ யாராக இருந்தாலும் சாதிப் பாகுபாடின்றி அனைவருக்கும் சலுகை என்ற வகையில் நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு. அதன் காரணமாகவே அனைத்து சமூகங்களையும் சார்ந்த 500 மாணவர்கள் பலன் பெற்றார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil