சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில் தேடப்படும் குற்றவாளிகள், ரவுடிகள் உள்பட 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்தவாரம் சென்னை அயனாவரத்தில் பதுங்கியிருந்த ரவுடிகள் செந்தில் குமார், சுடலைமணி ஆகியோர் காவல்துறையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து சென்னையிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் ரவுகள், சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகரக் காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தலைமையில் இணை ஆணையர்கள் ரவி, பாலசுப்பிரமணியம், துரை ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் எல்லாத்துறை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் தலைமையில் 5,000 காவலர்கள் நள்ளிரவு சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 440 குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தப்பட்டது. விடுதிகள், உணவகங்கள், சந்தேகத்திற்கு உரிய வாகனங்கள் என எல்லா இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில், காவல்துறையினர் தேடிவந்த பயங்கர ரவுடிகள் 50 பேர், பழைய குற்றவாளிகள் 150 பேர், தலைமறைவுக் குற்றவாளிகள் 50 பேர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 800 பேரும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 100 பேரும், பொது அமைதிக்கு ஊறு விளைவித்த 50 பேரும் சிக்கினர்.
ஆக மொத்தம் 1,200 பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் தேவையானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.