மத்திய, நகரக் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி உத்தரவிட்டுள்ளார்.
சட்டப் பேரவையில் கூட்டுறவு மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளைச் செயல்படுத்துவது பற்றிய ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று தமிழக கூட்டுறவு அமைச்சர் கோ.சி.மணி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களைத் தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் வைப்பு நிதி வாடிக்கையாளர்களுக்கும் திரும்ப வழங்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இப்போது அமைச்சர், தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் வைப்பு நிதியை உடனடியாகத் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் உள்ள சம்பளப் பிரச்சனை, மாவட்ட மத்திய மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், பொதுவினியோகத் திட்ட அங்காடிகளில் காலி இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் உணவு மற்றும் நகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலர் சண்முகம், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திரநாத் ஸ்வேன், கூடுதல் பதிவாளர் எல்.சந்திரசேனன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.