மகாவீரரின் போதனைகள் எல்லோருடைய வாழ்விலும் இடம்பெற்று எளிமையும், மனிதநேயமும் எங்கும் பரவிட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஜைன சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் ஆன மகாவீரர், 2600 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முதலாக அன்றாட வாழ்வில் அகிம்சையை வலியுறுத்திய மகான் ஆவார். சொல்லிலும், செயலிலும் அகிம்மை, சத்யம், களவு செய்யாமை, பிரம்மச்சரியம், பொருளாசை துறத்தல் இவற்றை வாழ்க்கை வழியாக கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நம்மைச் சுற்றியுள்ள பொருட்களின் உண்மை நிலையை உணர வேண்டும் என்றும், உயர்நிலையை அடைய வழிகாட்டும் மதத்தின் வேதங்களுக்கும் வேறுபாடுகளுக்கும் இடமில்லை என்றும் மகாவீரர் போதித்தார் பூசல் மிக்க இன்றைய உலகுக்கும், அவருடைய போதனைகள் வழிகாட்டத்தக்கவை. அந்த மகானின் போதனைகள் எல்லோருடைய வாழ்விலும் இடம்பெற்று எளிமையும், மனிதநேயமும் எங்கும் பரவிட வேண்டும்.
மகாவீரரின் கொள்கைகளைப் பின்பற்றி உலகெங்கும் வாழும் சமய மக்கள் அனைவருக்கும் அவருடைய பிறந்தநாளையொட்டி என் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.