தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தாலும் சிலர் குறைகூறி வருகின்றனர் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள கேள்வி பதில் அறிக்கை வருமாறு:
கேள்வி: அந்நாள் அமெரிக்க அதிபர் நிக்சன், அண்டை மாநிலத்து முதல்வர் ஹெக்டே இருவர் மீதும் அவர்களே தொலைபேசியை ஒட்டுக் கேட்டதாக கிளம்பிய குற்றச்சாட்டு காரணமாகத்தானே பதவியை ராஜினாமா செய்தார்கள்.
ஆனால் அந்த வரலாறு தெரியாத சில வரட்டு மதியினர் இங்கே தமிழகத்தில் இரு அதிகாரிகளுக்கிடையே தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதற்காக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார்களே? இதற்கு காரணம் என்ன?
பதில்: என் செய்வது, இந்த முதலமைச்சருக்கு "முப்புரி நூல்'' கிடையாதே. இவர் கடவுளின் முகத்தில் பிறந்த சாதியில் பிறந்தவர் அல்லவே, காலில் பிறந்த சாதியில் பிறந்தவராயிற்றே, அதனால்தான் இந்த முதல்வர் தலைமையில் இந்த ஆட்சியில் அன்றாடம் நடைபெறுகிற அற்புத சாதனைகளை ஒருசாரர் மூடி மறைத்து விட்டு வேண்டும் என்றே திட்டமிட்டு சில விஷமச் செய்திகளை பரப்பி அந்த நெருப்பில் குளிர்காய முனைகிறார்கள். என்ன நடந்தது? எப்படி நடந்தது? யாரால் நடந்தது? என்று விசாரித்து அறிந்து வெளியிட உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்தாலும், `விகடன்' கேலி செய்கிறார். சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்து நடிகை காஞ்சன மாலையின் பேச்சையே டேப் செய்து போட்டு காட்டி மிரட்டிப் பணிய வைத்த பரம்பரையினர் அல்லவா?
கேள்வி: சென்னை மாநகரில் நடுத்தரக் குடும்பம் ஒன்று குடியிருக்க வாடகை வீடு 1500 சதுர அடி கொண்டதாகக் தேடினால் அதற்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரத்துக்கு குறையாமல் வாடகை தர வேண்டும் என்ற நிலை இருக்கும் போது, அண்ணா மேம்பாலம் அருகில் சென்னையின் மையப் பகுதியில் சுமார் 20 கிரவுண்ட் இடத்தில் மிகப்பெரிய ஓட்டல் ஒன்றினை மாதம் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு பல ஆண்டு காலமாக கொடுத்திருக்கிறார்கள் என்பதில் இருந்து என்ன தெரிகிறது?
பதில்: தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு ஏமாளிகள் என்று நினைத்திருந்தார்கள் என்பது தெரிகிறது.
கேள்வி: அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் 2 பேருக்கு பேரவை விதித்த தண்டனையை குறைக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. கொறடா விடுத்த வேண்டுகோளை ஏற்று நீங்கள் அதை நேற்று அறிவிப்பு செய்த போதிலும் அதற்கு ஒரு நன்றி கூட எதிர்க்கட்சி சார்பில் தெரிவிக்கவில்லையே?
பதில்: நன்றியை எதிர்பார்த்து நான் அந்த அறிவிப்பை செய்திடவில்லை. நன்றி தெரிவித்தால் பின் விளைவு என்னவாகும் என்பது எனக்கு தெரியாதா என்ன?
கேள்வி: தி.மு.க. ஆட்சியின் இருளை அகற்ற சித்ரா பவுர்ணமியன்று வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?
பதில்: இந்த கேள்விக்கு நான் பதில் அளிப்பதை விட கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் `ரிப்போர்ட்டர்' வார இதழுக்கு இதே கேள்விக்கு அளித்த விடையாவது, "அ.இ.அ.தி.மு.க.வில் ஆர்ப்பாட்டம் போராட்டம் எல்லாம் இப்போது கேலிக் கூத்தாகப் போய் விட்டது. ஆர்ப்பாட்டங்களுக்கு போயஸ் தோட்டத்தில் யார் அனுமதி தருகிறார்கள்? யார் மறுக்கிறார்கள்? என்பது புரியவில்லை. கோடை காலத்தில் வழக்கமாக அம்மா இலவச நீர் மோர் பந்தல் போடச் சொன்னால் கோவையில் வீதிக்கு 4 பந்தல்கள் போடப்படும் அந்தப் பந்தல்களில் மாதக்கணக்கில் மோர் ஊற்றுவார்கள்.
இந்த முறை நீர் மோர் பந்தல் திறக்கச் சொல்லி அறிவிப்பு வந்த பிறகு கோவை மாநகரில் 3 இடங்களில் மட்டும்தான் நீர் மோர் பந்தல் திறந்திருக்கிறார்கள். அதையும் ஒரே நாளில் ஊற்றி முடித்துக் கொண்டார்கள்.
நிலைமை இப்படியிருக்க கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்ற கதையாக இப்போது சித்ரா பௌர்ணமி நாளில் வீடுகளில் விளக்கேற்றச் சொல்லி இருக்கிறார் அம்மா" என்று கடுகடுத்தார் அந்த அ.தி.மு.க. நிர்வாகி.
என் செய்வது, சித்ரா பௌர்ணமி அன்று ஊரெல்லாம் ஒளியின்றி இருளாக இருக்கும் அல்லவா அதனால் தான் விளக்கு ஏற்றச் சொல்கிறாரோ என்னவோ?
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.