சொத்து வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் பிரச்சார இயக்கம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விலைவாசி உயர்வினாலும், சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்களின் நுழைவினாலும் சாமானிய நடுத்தர வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் சொத்து வரி உயர்வு காரணமாக வணிக நிறுவனங்களின் வாடகை உயர்த்தப்படும். இதனால் வணிகர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். இதுமட்டுமன்றி குடியிருப்புக் கட்டடங்களுக்கு 25 விழுக்காடு வரியை உயர்த்தியிருப்பது நடுத்தர மக்களைப் பாதிக்கிறது.
சொத்துவரி என்பது குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும். குடியிருப்புக் கட்டடங்களுக்கு 10 விழுக்காடும், தொழிற்சாலை மற்றும் வர்த்தகக் கட்டடங்களுக்கு 25 விழுக்காட்டிற்கும் மேல் வரி உயர்வு இருக்கக் கூடாது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை ரத்து செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இதுகுறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் சென்னை பெருநகரக் கட்டட உரிமையாளர் சங்கமும் இணைந்து வரும் மே மாதம் தொடர் பிரச்சார இயக்கங்களை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் பேட்டியின்போது சென்னை பெருநகரக் கட்டட உரிமையாளர் சங்கத் தலைவர் பேரா. ராஜ்குமார் உடன் இருந்தார்.