ம.தி.மு.க. அங்கீகார விவகாரம் குறித்து இறுதிக் கட்ட விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது.
கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட தோதலை தொடர்ந்து ம.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் தனித்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் தங்கள் தலைமையிலான ம.தி.மு.க.வைத்தான் உண்மையான ம.தி.மு.க.வாக அங்கீகரிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தும் உள்ளனர்.
இதேபோல் தனது தலைமையிலான ம.தி.மு.க.தான் உண்மையானது என்று கூறி கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுக்களை வீடியோ ஆதாரங்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வைகோ தாக்கல் செய்தார்.
நேற்று இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தபோது, ம.தி.மு.க தலைவர் வைகோ, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, தேர்தல் ஆணையாளர்கள் நவீன் சாவ்லா, குரேஷி ஆகியோர் முன்பாக நேரில் ஆஜராகி தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர்.
அப்போது செஞ்சி ராமச்சந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனஞ்செயன் இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய மேலும் 4 வார கால அவகாசம் வழங்குமாறு தேர்தல் ஆணையர்களிடம் கோரினார்.
இதற்கு வைகோ தலைமையிலான குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து செஞ்சி ராமச்சந்திரன் வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், இறுதிக்கட்ட விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அன்று போட்டி ம.தி.மு.க. தலைவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.