விலைவாசி உயர்வைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று நடந்த மறியலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், முன்பேர வணிகத்தைத் தடை செய்ய வேண்டும், பதுக்கல் காரர்களைக் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மறியல் நடந்தது.
சென்னையில் நடந்த மறியலில் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கைது செய்யப்பட்டார். திருத்துறை பூண்டியில் நடந்த ரயில் மறியலில் மாநிலத் துணைச் செயலர் கோ.பழனிச்சாமி கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் 11 மையங்களில் நடந்த மறியலில் 10 ஆயிரம் பெண்கள் உள்பட 35 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் 11 மையங்களில் 1,000 பேரும், ராமநாதபுரத்தில் 10 மையங்களில் 8,00 பேரும், தேனியில் 40 மையங்களில் 1,500 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வேலூரில் 7 மையங்களில் 750 பேரும், கோவையில் 16 மையங்களில் 2,500 பேரும், தர்மபுரியில் 3 மையங்களில் 500 பேரும், கிருஷ்ணகிரியில் 9 மையங்களில் 2,500 பேரும் சிவகங்கையில் 9 மையங்களில் 1,500 பேரும், திருச்சியில் 12 மையங்களில் 1,500 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, ஈரோடு, புதுக்கோட்டை, நாகை, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மறியலில் கலந்துகொண்டு கைதாகினர்.