முதலமைச்சர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரின் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்ட அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு பேரின் தண்டனை ஒரு வாரமாக குறைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பேசும்போது, பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் தடை விக்கப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் வி.பி.கலைராஜன், அரி ஆகியோர் மீண்டும் சபையில் பணியாற்ற அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், எதிர்க்கட்சியில் உள்ளவர்களை கடுமையா, கேவலமாக கண்டிக்க வேண்டும் என்ற நிலை ஆளும் தி.மு.க.வுக்கு கிடையாது. செங்கோட்டையனின் கோரிக்கையை ஏற்று நாம் அண்ணா வழியில் வந்தவர்கள் என்பதால் தண்டனையை குறைக்கலாம் என்றிருக்கிறோம்.
முதலமைச்சர் என்ற முறையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஒருவார காலம் என்று குறைக்க கேட்டுக் கொள்கிறேன். இதை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று கருணாநிதி கூறினார்.
இதைத் தொடர்ந்து அவை முன்னவர் தீர்மானம் கொண்டு வந்து வி.பி.கலைராஜன், கோ.அரி ஆகியோர் ஏப்ரல் 15ஆம் தேதியில் இருந்து ஒரு வாரம் மட்டும் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக்கூடாது. அதன் பிறகு அவர்கள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இதையடுத்து இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.