மகாவீரரின் ஜெயந்தி தினமான இன்று நாம் ஒற்றுமை, அன்பு ஆகியவற்றின் மூலம் அமைதியை மேம்படுத்த நம்மை மறு அர்ப்பணம் செய்து கொள்வோம் என்று ஆளுநர் பர்னாலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா : மகாவீரர் அமைதி, வன்முறையற்ற பாதையை நமக்கு உபதேசித்துள்ளார். மகாவீரரின் ஜெயந்தி தினமான இன்று நாம் ஒற்றுமை, அன்பு ஆகியவற்றின் மூலம் அமைதியை மேம்படுத்த நம்மை மறு அர்ப்பணம் செய்து கொள்வோம். ஜைன சகோதரர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழ எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
முதலமைச்சர் கருணாநிதி : எந்த ஓர் உயிரினத்திற்கும் தீங்கு செய்தலாகாது; வன்முறை கூடாது; அன்பே உலக வாழ்வின் அடிப்படை என்பதை வலியுறுத்தியவர் மகாவீரர்.
அந்த மாமனிதரைப் போற்றுவதுடன், அவரது கோட்பாடுகளைத் தாங்கி வாழும் ஜைன சமய அன்பர்கள் மகாவீரர் பிறந்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் இந்நன்னாளில் சைன சமுதாய மக்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா : பெரிதும் போற்றி மதிக்கக் கூடிய மிகப் பெரிய சமண மதத்தலைவரும், சடங்குகளையும், போலி நம்பிக்கையையும் கடுமையாக எதிர்த்த புரட்சியாளருமான பகவான் மகாவீரர் அவதரித்த நன்னாளை உற்சாகத்துடன் கொண்டாடும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.