சந்தனமர வீரப்பன் குறித்து காவல்துறைக்கு துப்புக்கொடுத்து வந்த, ராஜாமணி கொலை செய்யப்பட்ட வழக்கில், நக்கீரன் கோபால் உள்பட 6 பேரை விடுதலை செய்து கோபிசெட்டி பாளையம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சந்தனமர வீரப்பன் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து வந்தவர் ராஜாமணி. இவர் கடந்த 1998ஆம் ஆண்டு, சந்தன மர கடத்தல் வீரப்பனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் சந்தனமர கடத்தல் வீரப்பன், அவனுடைய கூட்டாளிகள் சந்திரகவுடா, சேத்துக்குளி கோவிந்தன், மே.கே.ரங்கசாமி, மோகன், சரவணன், தமிழ்த்தீவிரவாதிகள் சத்தியமூர்த்தி, ஜெயபிரகாஷ், முத்துக்குமார், மணிகண்டன், நக்கீரன் கோபால் ஆகிய 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
வீரப்பன் கொடுத்த ஒரு துப்பாக்கி, 10 துப்பாக்கி குண்டுகள் ஆகியவற்றை நக்கீரன் கோபால் வைத்திருந்ததாக காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு, சென்னை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திலும், ராஜாமணி கொலை வழக்கு கோபி விரைவு நீதிமன்றத்திலும் நடந்து வந்தன.
ராஜாமணி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்த, சந்தனகடத்தல் வீரப்பன், சந்திரகவுடா, சேத்துக்குளி கோவிந்தன், மே.கே.ரங்கசாமி, சரவணன் ஆகியோர் இறந்து விட்டனர். இதைத்தொடர்ந்து நக்கீரன் கோபால், தமிழ்தீவிரவாதிகள் சத்தியமூர்த்தி, ஜெயபிரகாஷ், முத்துக்குமார், மணிகண்டன், மோகன் ஆகியோர் மீது மட்டும் கோபி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
வழக்கை நீதிபதி ஜெகநாதன் விசாரித்து வந்தார். வழக்கு தொடர்பான சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை செய்து முடிந்ததைத்தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
நக்கீரன்கோபால் உள்பட 6 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.