''காங்கிரஸ் கட்சியில் இருந்துக் கொண்டு யாரும் மறைந்த, வாழும் தலைவர்களின் பெயர்களில் எவ்விதமான தனி அமைப்புகளையும் நடத்தக் கூடாது'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அனைத்து பிரிவுகளுக்குமான சார்பு அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகள் யாவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியால் அங்கீகரிக்கப்பட்டு அங்கே உள்ள தலைமை அலுவலகத்தின் மூலம், அதற்கென்று நியமிக்கப்பட்ட தனித் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களின் கீழ் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளிலும் இயங்கி வருகின்றன.
காங்கிரஸ் பேரியக்கத்தின் அதிகாரப்பூர்வமான இந்த சார்பு அமைப்புகளைத் தவிர வேறு எந்த அமைப்பும் காங்கிரஸ் கமிட்டியால் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல.
இந்நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே சிலர் காங்கிரஸ் தலைவர்களின் பெயரில் ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு அது காங்கிரசின் சார்பு அமைப்பு என்ற பொருளை தரும் வகையில், 'லெட்டர் பேட்', 'விசிட்டிங் கார்டு'களை போட்டுக் கொண்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று ஏராளமான புகார்கள் பொதுமக்கள், காங்கிரஸ் தோழர்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளன.
எனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு யாரும் மறைந்த வாழும் தலைவர்களின் பெயர்களில் எவ்விதமான தனி அமைப்புகளையும் நடத்தக் கூடாது என்று கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரசின் ஒழுங்கு கட்டுப்பாடுகளை பேணிக்காக்க அகில இந்திய காங்கிரசால் ஒப்புதல் பெறாத அப்படிப்பட்ட அமைப்புகளை நடத்தும் காங்கிரஸ் தோழர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.