''அனுமதியின்றி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை நடத்தி மாணவர்களை ஏமாற்றுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பா.ம.க உறுப்பினர் காவேரி கேட்ட கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலில், தமிழ்நாட்டில் 254 தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 213 கல்லூரிகள் தமிழக அரசின் ஒப்புதலை பெற்று இயங்கி வருகின்றன. 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரசின் ஒப்புதலை பெறாமல் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் 30 நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு சென்று சுமார் 2000 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி பெற்றிருக்கிறார்கள். ஆயினும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளனர்.
நீதிமன்ற உத்தரவிலும், தமிழக அரசின் அனுமதிபெற்ற பிறகே தேர்வு எழுதும் மாணவர்களின் முடிவை கூட வெளியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுவதை அரசு அனுமதிக்காது என்று தங்கம் தென்னரசு கூறினார்.