சிறிலங்காவுக்கு 53 இரும்பு குழாய்களை கடத்த முயன்ற ஆறு பேரை க்யூ பிராஞ்ச் காவலர்கள் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரையில் இருந்து சிறிலங்காவுக்கு இரும்பு குழாய்கள் கடத்தப்படுவதாக க்யூ பிராஞ்ச் காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் மீமிசல் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மீமிசல் பகுதியை சேர்ந்த மீனவர் ரகு என்பவரின் உதவியுடன் படகில் 53 இரும்பு குழாய்களை கடத்தி செல்ல முயன்ற முத்துராமலிங்கம், மணி, குஞ்சன், சிவசாமி, முத்து ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த இரும்பு குழாய்கள் ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வீராசாமி, சுரேந்திரன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.