ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த பொறியாளர் உடல் சொந்த ஊருக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. இன்று இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் உள்ள நிம்ப்ரோஸ் மாகாணத்தில் இந்திய எல்லைப்புற சாலை நிர்மாணப்படையை சேர்ந்த வீரர்கள் கடந்த 12ஆம் தேதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியை அடுத்த கே.திப்பனப் பள்ளியை சேர்ந்த கோவிந்தசாமி (45), உத்தரபிரதேச மாநிலம் காசியை சேர்ந்த மகேந்திர பிரதாப்சிங் ஆகிய பொறியாளர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்கள் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, தனி விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. அவர்களது உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் தமிழக பொறியாளர் கோவிந்தசாமியின் உடல், தனி விமானம் மூலம் நேற்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து உடலை வேன் மூலம் சொந்த ஊரான கே.திப்பனப்பள்ளிக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து மனைவி, மகள்கள், மகன் கதறி அழுதனர்.
பொது மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோவிந்தசாமியின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. அனைவரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர் இன்று இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. சடங்குகள் முடிந்த உடன் கோவிந்தசாமியின் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது சிதைக்கு கோவிந்தசாமியின் ஒரே மகன் கணேஷ் தீ மூட்டினார்.