''தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்'' என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இன்று மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக தூத்துக்குடி நகரம் விளங்குகிறது.
பெருகிவரும் தொழிற்சாலைகளாலும், வளர்ந்து வரும் துறைமுகத்தாலும், அமையவுள்ள சேது சமுத்திர கால்வாய் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளாலும், இந்நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள கட்டமைப்பு வசதிகளை வெகுவாக மேம்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே, தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
தமிகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றுடன் வேலூரும் மாநகராட்சியாக மாறும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது தூத்துக்குடி நகராட்சியும் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக ஆகிறது. இதன் மூலம் மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 10 ஆக உயருகிறது.