சென்னை: சட்டப் பேரவையில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு அவைத் தலைவர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க.வினர் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எழுந்த அ.இ.அ.தி.மு.க. கொறடா செங்கோட்டையன் எழுந்து, தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக இன்றும் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். அதுபற்றிப் பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
அதற்கு அவைத் தலைவர் ஆவுடையப்பன், இந்தப் பிரச்சனைக்கு முதலமைச்சர் நேற்று பதில் அளித்துவிட்டார். விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
அப்போது அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆதாரம் இருக்கிறது என்று குரல் கொடுத்தனர்.
உடனே அவைத் தலைவர் ஆதாரம் இருந்தால் அதை விசாரணை குழுவிடம் கொடுங்கள் என்றார்.
இதையடுத்து வெளிநடப்பு செய்வதாக செங்கோட்டையன் கூறினார். உடனே அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர்.