சென்னை: இந்துக் கடவுள்களை அவமதித்த 'வணக்கம்மா' படத்தின் தயாரிப்பாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி இயக்கத்தின் அமைப்பாளர் ராமகோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சினிமாத் துறையில் ஒரு சிலரின் இந்துமத விரோத செயலின் தொடர்ச்சியாக இந்துக்கள் புனிதமாக போற்றி வணங்கும் ஸ்ரீராமர், ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்கள் தெருவோரத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சியுடன் அச்சிடப்பட்டு "வணக்கம்மா' என்ற திரைப்படத்தின் தொடக்க விழா இன்று நடப்பதாக உள்ளது.
ஸ்ரீராமனும், அனுமனும் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது போலவும், தண்ணி அடிப்பது, தம் அடிப்பது போன்றும் காட்சிகள் இடம் பெறப் போவதாக தயாரிப்பாளர் கூறியிருப்பது பக்தர்களை கொதிப்படையச் செய்கிறது. இதனை திரைப்படத் துறை அனுமதிக்கக் கூடாது.
"டாவின்சி கோடு' என்ற திரைப்படம் வந்தபோது கிறிஸ்தவர்களின் மனது புண்பட்டதாம். ஆனால் இந்துக் கடவுள்களை அவமானப்படுத்துவதால் இந்து மத உணர்வு புண்படாதா? இதை திரைப்படத் துறையினர் யோசிக்க வேண்டும்.
"தமிழ் முழக்கம்' சாகுல் அமீது, இயக்குனர் சீமான் (சைமன்), கடவுள் மறுப்பாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் திரைத் துறையில் புகுந்து கொண்டு இந்துக் கடவுள்களை அவமதிப்பது போல காட்சிகளை இடம்பெறச் செய்வது இந்து மத அழிப்பு திரைத்துறை பயங்கரவாதமாகும்.
இந்த திரைப்படத் துறையில் ஒரு சிலரின் அநாகரீகமான, ஆபாசமான செயல்களை அனுமதிக்கக்கூடாது. இந்து மதத்திற்கு விரோதமாக நடிக்கின்ற நடிகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டும் விதமாக இந்தப்பட விழா நடக்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். தணிக்கை துறை (திரைப்படம்) இதை அனுமதிக்கக் கூடாது. அருவெறுப்பான, ஆபாசமான அந்த அழைப்பிதழை வெளியிட்டதற்காக தயாரிப்பாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.