திருவாரூரில் தலித் சமூகத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டம் மன்னாகுடி அருகில் உள்ள சேரன்குளத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அறிவழகன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சியடைந்த அறிவழகன் குடும்பத்தினர் மேல்சாதி மக்கள் வசிக்கும் இடத்தில் மனை வாங்கி வீடுகட்டி வாழ்ந்து வருவதால், மேல்சாதி ஆதிக்க உணர்வில் அறிவழகன் படுகொலை செய்யப்பட்டு இருப்பாரோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நடந்துவரும் தொடர் படுகொலைகளை ஒட்டி இந்தக் கொலை பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகள் எனச் சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால், பொதுமக்களிடம் நிலவும் பீதியையும் அச்சத்தையும் போக்கும் வகையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.