தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், ஒரு அதிகாரியும் பேசிய தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசார ணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
சட்டப் பேரவை இன்று தொடங்கியதும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, அரசு அதிகாரி களின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் கூறினார்.
இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணாநிதி கூறுகையில், தலைமைச் செயலாளரும், ஒரு அதிகாரியும் ஒரு வழக்கு தொடர்பாக பேசியதாக செய்தி வெளிவந்துள்ளது. அதில் என்ன தவறு இருக்கிறது? தேசிய நலனுக்கு அது விரோதமானதா? சட்டப்படி குற்றமா? எதிர்க்கட்சிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதா? நெறிமுறைகளுக்கு விரோதமானதா?
இப்படி எதுவும் அந்த உரையாடலில் இல்லை. இப்போது ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியில் யாருடைய தொலைபேசியையும் யார் வேண்டுமானாலும் ஒட்டு கேட்கலாம்; டேப் செய்யலாம். விஞ்ஞான வளர்ச்சியால் அவ்வளவு சுலபமாகி விட்டது.
தலைமைச் செயலாளர் உரையாடியதாக கூறப்படும் அந்த செய்தி எப்படி வந்தது; யாரால் பெறப்பட்டது என்பதையும் அந்த பேச்சில் குற்றம் இல்லையென்ற போதிலும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தி உண்மை இந்த அவைக்கு தெரியப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ம.க. ஆகிய கட்சிகள் வரவேற்றது.