முதலமைச்சர் கருணாநிதி பேசும்போது தடுக்கும் நோக்கில் செயல்பட்ட அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் கலைராஜன், அரி ஆகியோர் சட்டப் பேரவை கூட்டத் தொடர் முழுவதும் நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டப் பேரவையில் இன்று அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தொலைபேசி பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப்படுவதாக கூறி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளிக்க முதல்வர் முற்பட்டபோது அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் வி.பி.கலைராஜன் தனது இருக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்து முதலமைச்சரின் பேச்சை தடுக்க வந்தார்.
இதே போல் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் கோ.அரி ஓடி வந்து முதலமைச்சர் பேசக்கூடாது என்று கூச்சலிட்டு சபை அலுவல்களுக்கு இடையூறு செய்தார்.
இதைத் தொடர்ந்து சபைக்கு குந்தகம் ஏற்படுத்திய வி.பி.கலைராஜன், கோ.அரி ஆகிய இருவரையும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முழுவதும் தற்காலிகமாக நீக்கம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் அன்பழகன் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து முன்மொழிந்தார். இதை தொடர்ந்து தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அவைத் தலைவர் ஆவுடையப்பன், சபையில் கண்ணியக்குறைவாகவும் நடந்து கொண்ட வி.பி.கலைராஜன், கோ.அரி ஆகியோரை இந்த கூட்டத் தொடர் முழுவதும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்றார்.