சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்தை சமாளிக்க காட்டு யானைகள் வனக்குட்டைகளுக்கு படையெடுத்து வருகிறது. இவைகள் குளிப்பதை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுயானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றது.
இந்த வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருக்கும் உணவுகளை உட்கொண்டுவிட்டு வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் இருக்கும் தண்ணீரை குடித்துக்கொண்டு வாழ்ந்து வந்தது. தற்போது கோடை வெப்பம் அதிகரித்து மழை இல்லாத காரணத்தால் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் இல்லை.
இதனால் இந்த வனவிலங்குகள் குறிப்பாக யானை கூட்டங்கள் தண்ணீர் தேடி அலையும் நிலையை தவிர்க்க வனத்துறையினர் குட்டைகளுக்கு லாரி மற்றும் டிரேக்டர் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இதனால் காட்டு யானைகள் கிராமங்களுக்கு படையெடுக்கும் நிகழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடுமையான வெப்பம் வீசி வருகிறது. இதனால் வனவிலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாலை மூன்று மணிக்கு மேல் காட்டுயானைகள் குழுக்குழுக்களாக வந்து வனக்குட்டையில் தண்ணீர் குடித்துவிட்டு தண்ணீரை தன் தும்பிக்கையில் எடுத்து உடல் முழுவதும் இரைத்து சூட்டை தனிக்கிறது.
இந்த நிகழ்ச்சியை பார்க்க இப்பகுதி மக்கள் ஆர்வமாக அந்த நேரத்திற்கு வந்து விடுகின்றனர். சில யானை கூட்டங்கள் மனிதர்களை கண்டதும் மீண்டும் காட்டுக்குள் சென்று விடுகிறது. சில கூட்டங்கள் கண்டுகொள்ளாமல் தங்கள் குளியலில் முழுமையாக ஈடுபட்டு வருகிறது.