தொலைபேசிகள் ஒட்டு கேட்பது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இன்று அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையில் இன்று அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் தொலைபேசிகள் ஓட்டுக் கேட்பது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆங்கில நாளிதழை எடுத்துக் காட்டினர்.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் கருணாநிதி, அரசு அதிகாரிகள் தொலைபேசி பேச்சுகள் ஓட்டுக் கேட்பது பற்றி விவாதித்து விளக்கம் அளிக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.
ஆனாலும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டப்படி இருந்தனர். அவர்களை அமைதி காக்கும் படி அவைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் அவர்களை பேரவையில் இருந்து வெளியேற்றும்படி அவைத் தலைவர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சபை காவலர்கள் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றினர். அவர்களை தொடர்ந்து ம.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.