சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டுமானால் பேருந்துப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான பா.ம.க.வின் செயல்திட்ட அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை சுமார் 79 லட்சமாக அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கையும் கடந்த 23 ஆண்டுகளில் 1.5 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் நெரிசலில் சிக்கித் திணறுகிறார்கள். இந்த நெரிசலைத் தீர்க்க மேம்பாலங்கள் கட்டுவது, வாகன நிறுத்துமிட வசதி செய்து கொடுப்பது ஆகியவை மட்டுமே உதவாது.
சென்னையில் 26 விழுக்காடு மக்கள் குடிசைகளில் வசிக்கின்றனர். 71 விழுக்காட்டினர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் பயன்படுத்துவது, பேருந்து, ரயில், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களைத்தான்.
மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை 22 விழுக்காட்டினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இவர்களால்தான் 80 விழுக்காடு சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.
இதைத் தடுக்க நடைபாதைகள் மேம்படுத்தப்பட வேண்டும். பேருந்துப் போக்குவரத்து அதிகரிக்கப்பட வேண்டும். சென்னையில் சுமார் 6,000 பேருந்துகளையாவது இயக்க வேண்டும்.
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கூறினார்.