சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைக் கண்டித்து வருகிற 16 ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து நிர்வாகத்தையும் தி.மு.க. அரசையும் தட்டிக் கேட்கும் அண்ணா தொழிற்சங்க மத்திய சங்கம், கிளைச் சங்க நிர்வாகிகள் பணிமனை மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அதற்கு துணை போகும் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க. மாநகரப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வருகின்ற 16-ஆம் தேதி (புதன்கிழமை) அன்று பிற்பகல் 3 மணி அளவில் மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமையக வாயில் பல்லவன் இல்லம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.இ.அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலர் பி.எச்.மனோஜ் பாண்டியன் தலைமை வகிப்பார். மாநகரப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிலாளர் சங்கத்தின் செயலர் பி.ராஜேந்திரன் முன்னிலை வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.