தமிழகத்தில் அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை, இதனால் விளம்பர பலகைகள் அகற்றும் பணி தொடரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனுமதியில்லாத விளம்பர பலகைகளை அகற்றுவது கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் விளம்பர ஏஜென்சிகள் தாக்கல் செய்த வழக்கு, கடந்த 9.4.2008-ல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம், 11.4.2008 முதல் 15.4.2008 வரை தடை விதித்துள்ளதாக உண்மைக்கு மாறான செய்திகளும், வதந்திகளும் வந்துள்ளன. இது சம்பந்தமாக உயர் நீதிமன்றம் எந்த விதமான தடையாணையும் பிறப்பிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நேற்று தெளிவுரை வழங்கியுள்ளது.
இது சம்பந்தமாக எந்தவொரு ஆணையையும் உயர் நீதிமன்றம் வெளியிடவில்லை என்றும், 15.4.2008-க்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசு மேல் நடவடிக்கை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.