''உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை நீட்டித்து மத்திய அரசு 2006ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்டதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஏற்ப வேலைவாய்ப்பு, கல்வியில் 1993 முதல் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வந்துள்ள அதே நடைமுறை உயர்கல்வி நிறுவனங்களிலும் தொடர வேண்டும் என்ற உத்தரவும், 2006ஆம் ஆண்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு உகந்ததாக அமைந்துள்ளது.
மத்திய அரசு வரும் கல்வியாண்டிலேயே இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்கள் என வகைப்படுத்தப்படும் `கிரீமி லேயர்' முறை பின்பற்றப்படும்போது, அதற்கு கீழ்நிலையில் உள்ள பிரிவினரில் தகுதியானவர்கள் இல்லை எனில், அந்த இடங்கள் பொதுத் தொகுதிக்கு மாற்றப்படுவதை தவிர்த்து, பிற்படுத்தப்பட்டவர்களுக்கே சென்று சேருவதை உத்தரவாதப்படுத்துமாறு மத்திய அரசை கோருகிறது.
நாட்டின் தலைமை நீதிமன்றம் அளித்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை செயல்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவை நீட்டித்து, சமூக நீதியும், நல்லிணக்கமும் பேணப்பட ஒத்துழைக்க வேண்டும் என்று என்.வரதராஜன் கூறியுள்ளார்.