உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்க முழு முயற்சி எடுத்த முதலமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி, உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரிக்கை வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு முழு முயற்சி எடுத்த முதலமைச்சர் கருணாநிதிக்கும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் பேசுகையில், இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சியினரும் ஆதரிக்க வேண்டும் என்றார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் செல்வம் ஆகியோரும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சியினுடைய சட்டப் பேரவையினுடைய தலைவர் கோ.க. மணி முன்மொழிந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் சுதர்சனத்தால் வழிமொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மீது சில கருத்துக்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
1920ஆம் ஆண்டுக்குப்பிறகு, முதல் கம்யூனல் ஜி.ஓ. எனத் தொடங்கி இட ஒதுக்கீடு மத்திய அரசு கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான தனிச்சட்டம் 2007-ஆம் ஆண்டில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்றார்.
இதையடுத்து முதலமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பின்னர் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் அறிவித்தார்.