சென்னை- பெங்களூருக்கு இடையிலான நெடுஞ்சாலையை தொழில்வள நெடுஞ்சாலையாக அறிவித்திட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 26.10.07 அன்று எழுதிய நேர்முகக் கடிதத்தில் புதுடெல்லியிலிருந்து மும்பை வரை செல்லும் நெடுஞ்சாலையைத் தொழில்வள நெடுஞ்சாலையாக உருவாக்கிட மத்திய அரசு அறிவித்துள்ளது போல், சென்னை- பெங்களூரு இடை யிலான நெடுஞ்சாலையையும் தொழில்வள நெடுஞ்சாலையாக மேம்படுத்துவதற்குரிய சிறந்த வாய்ப்புகள் உள்ளன என்று கூறி, சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையைத் தொழில் வள நெடுஞ்சாலையாக அறி வித்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையைத் தொழில் வள நெடுஞ்சாலையாக அறிவிப்பதன் மூலம் இந்த நெடுஞ்சாலை முழுவதிலும் உலகத் தரத்திற்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக வழி வகுக்கும் என்றும், அத்துடன், இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ள ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி தொடர்ந்து நிலைபெறவும், மேலும் மேம்படவும் உதவும் என்றும் தமிழக அரசு கருதுகிறது.
இந்த அடிப்படையில், முதலமைச்சர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் தமிழக அரசுக்கு 1.4.2008 அன்று எழுதியுள்ள கடிதத்தில், சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை ஒரு தொழில் வள நெடுஞ்சாலையாக மேம்படுத்துவதற்கு உரிய வாய்ப்புகள் உள்ளதாகவும், இத்திட்டம் மும்பை வரை நீட்டிக்கப்படுமாயின் மேலும் பயன்தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சென்னை- பெங்களூரு- மும்பை தொழில் வள நெடுஞ்சாலைத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தொடர்புடைய மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு ஒரு கொள்கை அறிக்கையினைத் தயாரிக்கும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.