27 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த இணையற்ற வெற்றி என்று முதலமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அளித்த தீர்ப்பை மாற்றிட சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 2007ம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் சட்டப் பேரவையில் அரசின் சார்பில் நான் முன்மொழிந்த தீர்மானம்,
இன்றைக்குத் தடை கடந்து, பீடு நடை போட்டு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றி வைத்துள்ள ஒளி விளக்காகப் பிரகாசிப்பது கண்டு என் ரத்தத்துடன் கலந்து ஊறிய சமூக நீதிக் கொள்கைக்குக் கிடைத்த இணையற்ற வெற்றியென்று கருதுகிறேன்.
"கிரீமிலேயர்'' பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங் கூறியுள்ளதும் ஆறுதல் அளித்திடக் கூடியதாகும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.