ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறுத்திவைத்திருப்பது சரியல்ல, எனவே இது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்டவேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ராணுவ பாதுகாப்பு வழங்கக்கோரியும், கர்நாடக தமிழ்ச் சங்கம் அருகில் திறக்கப்படாமல் உள்ள திருவள்ளுவர் சிலையை திறக்கக்கோரியும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான தொல்.திருமாவளவன் தலைமைதாங்கி பேசுகையில், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற பாதுகாப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் மத்திய அரசின் மெத்தனத்தை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்றார்.
முன்னதாக தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் வரை மத்திய அரசு அங்கு நிலையான ராணுவ பாதுகாப்பை வழங்கவேண்டும். கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவேண்டும் என்பதற்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஒருமாத காலத்திற்கு தள்ளிவைக்கவேண்டும் என்ற முடிவை முதலமைச்சர் கருணாநிதி எடுத்து இருப்பது கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் என்றால் அதை வரவேற்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு தள்ளி வைத்திருப்பதால் கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு ஏற்படப்போவது இல்லை. எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தள்ளிவைத்திருப்பது சரியானதாக இருக்காது. இந்த திட்டத்தை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பதுதான் நன்றாக இருக்கும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து முதலச்சர் கருணாநிதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும்.
ஒகேனக்கல் தமிழக எல்லையில்தான் இருக்கிறது என்பதை மத்திய அரசு உடனடியாக அறிவிக்கவேண்டும். கர்நாடக தமிழ் சங்கம் அருகில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் திருவள்ளுவர் சிலையை திறக்க தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.