சென்னைக்கு அருகில் பசுமை விமான நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சட்டப் பேரவையில் தமிழகப் போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் இன்று போக்குவரத்துத் துறையின் மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்த அமைச்சர் கே.என்.நேரு, கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியுருப்பதாவது:
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் துவங்கப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்தல், விரிவுபடுத்தல் பணிகளில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்குத் தேவையான 1,069.99 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணி அரசினால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு விமான நிலைய நவீனமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.1,800 கோடி செலவிட விமான நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் 2010 ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, ஸ்ரீபெரும்புதூரில் புதிதாக பசுமை விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்பு குறித்துத் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சமர்ப்பித்துள்ள பெருந்திட்டத்தின் கீழ், அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் தேவையைக் கையாள்வதற்கு கோவை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்கள் விரிவாக்கல், நவீனமாக்கல் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.