தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த மத்திய நிபுணர் குழு விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவிருப்பதாக மாநில வருவாய்த் துறை ஆணையர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய வெள்ள நிவாரணத் தொகை குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழையால் 9 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய உள்துறை இணைச் செயலர் தர்மேந்திர சர்மா தலைமையிலான நிபுணர் குழு, சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வருவாய்த்துறை ஆணையர் சக்தி காந்ததாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை ஆணையர் சக்தி காந்ததாஸ், “நிபுணர் குழுவின் சேத மதிப்பீடு, தமிழக அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகை ஆகியவற்றை இணைத்து நிபுணர் குழு மத்திய அரசிற்கு விரைவில் அறிக்கை அளிக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வெள்ள நிவாரணம் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்” என்றார்.